Friday, July 11, 2014

மாதவிலக்கும், சில மூடநம்பிக்கைகளும்! Menstrual Superstitions

1, மாதவிலக்கு என்றால் என்ன? மாதவிலக்கு எதனால் உருவாகிறது? அதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன? அதனால் பெண்கள் படும் அவஸ்தைகள் என்ன? மாதவிலக்கு உண்டானால் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும்?


என்பன பற்றி எந்தவித தெளிவும் இன்றி பல பெரியவர்கள் நடந்து கொள்ளும் விதம் மிகவும் கவலையடைய வைக்கின்றது! இன்றும் கூட பல கிராமங்களில் மாதவிலக்கு உண்டான பெண்களை பல மூடநம்பிக்கைகளினால் மிகவும் மோசமாக நடத்துகின்றார்கள்!

பெண்களுக்கு மாதவிலக்கு உண்டானவுடன் கிணற்றடியில் நீர் அள்ளக்கூடாது, பூமரஞ்செடிகளை தொடக்கூடாது, வீட்டு விளக்கேற்றக்கூடாது, இரவினில் வெளியில் எங்கும் போகக்கூடாது, வீட்டினில் எல்லா இடங்களிலும் நடமாடக்கூடாது, எல்லா இருக்கைகளிலும் இருக்கக்கூடாது, தனியாக அறை, தனியாக படுக்கை, தனியாக இருக்கை, தனியாக உணவு உண்ணும் பாத்திரங்கள் என இன்னும் ஏராளமான கட்டுப்பாடுகளுடன் (அதிகளவில் கிராமப்புறங்களில்) பெரியவர்களால் சில தவறான, தெளிவில்லாத மூடநம்பிக்ககைகளுடன் அந்த மாதவிலக்கு காலப்பகுதியில் ஒதுக்கப் படுகின்றார்கள். இதனால் பல பெண்கள் “ஏன் பெண்ணாக பிறந்தோம்” என எண்ணுமளவிற்கு வெறுப்புக்கு menstruation cycle ladies mm-1உள்ளாக்குகின்றார்கள்!

மூடநம்பிக்கையோடு அணுகும் அந்தப் பெரியவர்களிடம் நான் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன்..?

2, *மாதவிலக்கு உண்டான பெண்ணானவள் கிணற்று நீர் அள்ளினால் கிணறு என்ன இடிந்து விழுமா? அல்லது கிணற்று நீர் நஞ்சாகி விடுமா? சில பெரியவர்கள் இதற்கு விளக்கம் சொல்லுவார்கள்; அவர்களின் விளக்கம் இதுதான், கிணற்றுக்குள் “கங்காதேவி” இருக்கிறாராம்! மாதவிலக்கு உண்டான பெண் தினமும் குளிக்கத்தான் செய்வாள்! “கங்காதேவி” குடியிருக்கும் அதே தண்ணீரைத்தான் அவள் குளிக்கவும் பயன்படுத்துகிறாள்.அவள் கை பட்டு நீர் அள்ளினால் நீருக்கு குற்றம் என்றால்…. அவளின் உடலில் பட்டு குளித்த நீருக்கு குற்றம் இலையா?

*மாதவிலக்கு உண்டான காலத்தில் அவள் தினமும் அதிகளவில் நீர் பருகுகிறாள், அவள் பருகிய அந்த நீரானது உடலினுள் போய் சிறுநீர் வாசலினால்தான் வெளியேறுகிறது. சிறுநீர் வாசலின் கீழ்பகுதியில்தான் கரு வாசலும் இருக்குறது. கரு வாசலினால்தான் மாதவிலக்கு உண்டான காலங்களில் குருதியும் வெளியேறுகிறது. மாதவிலக்கு குருதியும், காங்கதேவி நீரும் அங்கே ஒரே சமயத்தில் கலக்கும் போது… அந்த நீரில் உள்ள “கங்காதேவிக்கு” குற்றம் இல்லையா?

*பூமரஞ்செடிகளை தொட்டால் அந்தச் செடியானது கருகி விடும் அல்லது பட்டு விடும் என்கிறீர்கள்…. அவ்வாறு உடனே கருகி, பட்டுப் போன மரத்தை நீங்கள் பார்த்ததுண்டா?

*வீட்டு விளக்கு ஏற்றக்கூடாது என்கிறீர்கள்…. அவ்வாறு மீறி ஏற்றினால் அப்படி என்னதான் ஆகி விடும்? விளக்கு எரியாதா? அவ்வாறு எரிந்தால் என்ன மாற்றங்களைக் காண்பீர்கள்?

3, *இரவினில் எங்கும் நடமாடக்கூடாது என்கிறீர்கள், அவ்வாறு நடமாடவேண்டிய அவசியம் ஏற்பட்டால் கையில் அடுப்புக்கரி கொடுத்து விடுகிறீர்கள்…. அந்த அடுப்புக்கரியில் அப்படி என்ன சக்தி இருக்கிறது?அந்த அடுப்புக்கரியானது ஒரு மரத்திலிருந்து உருவாகிய விறகு! எரிந்து உயிரற்றுப் போன அந்தக் கரித்துண்டுக்கு சக்தி உண்டென்றால், உயிரோடு இருக்கும் மரங்களுக்கு சக்தி இல்லையா? அதிகமான கிராமப் புறங்களில்தான் இரவினில் நடமாடக்கூடாது என்கிறார்கள். கிராமப் புறங்களில் அதிகளவில் மரங்களே உள்ளன…. மரங்கள் இருக்கும் பகுதியில் “கெட்ட ஆவி” பிடிக்குமென்றால், அந்த மரத்திலே எந்தவிதமான சக்திகளும் இல்லையென்றுதானே அர்த்தம்! அவ்வாறுஇருக்கையில் அந்த மரத்திலேயிருந்து வந்த அடுப்புக்கரிக்கு “கெட்ட ஆவியை” துரத்தும் சக்தி எங்கிருந்து வந்தது?

*கிராமப் புறங்களில் இரவினில் வெளியில் நடமாடும் போது, கையினில் இரும்பு ஆணி கொடுத்து விடுவார்கள்! அதற்கு அவர்கள் “கையில் இரும்பு இருந்தால் பேய் பிசாசு அண்டாதாம்” என்பார்கள்! ஏற்கனவே அந்தப் பெண்ணானவளுக்கு மந்திரித்த தாயத்து வேறு இருக்கு!, அந்த தாயத்துக்கு இல்லாத சக்தி, அந்த நேரங்களில் அந்த இரும்பு ஆணிக்கு எவ்வாறு வந்தது?menstrual-cycle-mm 1

4, *வீடு முழுவதும் நடமாடினால் “தரித்திரம்” என்கிறீர்கள்…. அந்தப் பெண்ணானவள் மாதவிலக்கு நேரங்களில் தனியாக இருக்கும் அந்த அறைக்கு மட்டும் தரித்திரம் பிடிக்காதா?

*மாதவிலக்கு முடிவுற்றதும் வீடு முழுவதையும் கழுவித் துடைக்கின்றீர்கள்…. அப்படி என்னதான் மாதவிலக்கு உண்டானதால் அந்த வீட்டிற்கு ஏற்பட்டது?

*எல்லா இருக்கைகளிலும் இருக்கக்கூடாது என்கிறீர்கள்! மீறி இருந்தால் அந்த இருக்கைகள் எல்லாம் தீப்பற்றி எரியுமா? இல்லையென்றால் அப்படி என்னதான் நடந்து விடும் என்கிறீர்கள்? அந்தப் பெண்ணானவள் நன்றாக உடையணிந்துதானே இருக்கின்றாள்? மாதவிலக்கு என்பது அவ்வளவு மோசமான ஒரு நிகழ்வா? அது ஒரு சாதாரண உடலியல் பருவமாற்ற நிகழ்வுதானே..? இந்த நிகழ்வை ஏன் ஒரு பாரதூரமான நிகழ்வாக சித்தரித்து தவறான நம்பிக்கைகளுடன் அவளைத் தனிமைப் படுத்தி ஒதுக்கி சிறைப்படுத்துகின்றீர்கள்?

5, அவள் அணிந்த உடை, அவள் தொட்ட உடை, அவள் இருந்த இருக்கை, அவள் உறங்கிய படுக்கை, அவள் உணவருந்திய பாத்திரங்கள், அவள் நடந்து திரிந்த வீடு இன்னும் நிறைய அவளால் தொடப்பட்ட அனைத்தும் அவளின் மாதவிலக்கு காலம் முடிவுற்றவுடன் தண்ணீர் கொண்டு கழுவுகின்றீர்கள்… அப்படி கழுவுகின்ற அனைத்தையும் விஞ்ஞான ரீதியாக பரிசோதணை செய்து, அப்படி என்னதான் இருக்கிறதென்று காட்டமுடியுமா?

சரி உங்கள் பாணிக்கே வருவோம்… தண்ணீர் கொண்டு கழுவினால் எல்லாமே போய் விடும் என்றால், மாதவிலக்கு நேரங்களில் கிணற்றில் தண்ணீர் அள்ளிக் குளிப்பதை ஏன் தடுக்கின்றீர்கள்? நீர் அள்ளும் வாளியில் இருந்து, நீர் அள்ளும் கயிறு வரை தினமும் தண்ணீரில் கழுவப்படுகின்றதே..! அப்படி இருக்கும் போது அதில் என்ன குற்றம் கண்டீர்கள்?

மாதவிலக்கு உண்டான பெண்ணுக்கு கைக்குழந்தை இருந்தால்… அந்தக் குழந்தை பால் பருகுவதில் இருந்து, தாய் அணைப்பில் உறங்குவதில் இருந்து தினமும் தாயுடனேயே இருக்கின்றது. அந்த உயிருள்ள குழந்தை தினமும் தொட்டுக் கொண்டும், ஒட்டிக்கொண்டும் இருப்பதால் அந்தக் குழந்தைக்கு மட்டும் ஒன்றும் ஆகாது!, மற்ற உயிரற்ற பொருட்களுக்கு மட்டும் அப்படி என்னதான் ஆகிவிடப்போகிறது?

பெரியவர்களே நீங்கள்எந்தக் காலத்தில் இருக்கின்றீர்கள்?

மாதவிலக்கு என்பது வெளியில் இருந்து வாங்கி வரும் “தீண்டத்தகாத” ஒரு பொருள் அல்ல… உடலில் ஒட்டிக்கொண்டு திரிவதற்கு! அது பெண்களின் உடலினுள் உருவாகும் ஒரு கரு முட்டை! கரு என்பது புனிதமானது! அது உயிர்களை உருவாக்கும் ஒரு தாய்மையின் அடையாளம்! குருதி என்பது கூட புனிதமானது! அது உடலின் எந்தப் பகுதியில் இருந்து வந்தாலும் ஒன்றுதான்! ஒரே குருதிதான்! மாதவிலக்கு நேரங்களில் உருவாகும் குருதியும் அவளின் உடலில் இருந்துதான் வருகிறது! உடலில் காயங்கள் ஏற்பட்டாலும் அவளின் அதே உடலில் இருந்துதான் வருகிறது!

6, கோவில்களில் வழிபடும் போதும், தண்ணீர் அள்ளும் போதும், வீதியோரங்களில் நடக்கும் போதும், வீடுகளில் எந்த இடங்களிலும் எப்போதும் திடீரென ஒரு பெண்ணானவளுக்கு மாதவிலக்கு வந்து விட்டால்… அவளால் தொடப்பட்ட, அவளின் பாதம் பட்ட இடங்கள் அனைத்திற்கும் தரித்திரம் பிடித்து விடுமா? எத்தனை பெண்களுக்கு கோவில்களில் வைத்து மாதவிலக்கு வந்துருக்கும்… அதனால் அந்தக் கோவிலுக்கு தரித்திரம் பிடித்து விடுமா என்ன?

மாதவிலக்கு என்பது திகதிகள் நேரங்கள் பார்த்து வருவதில்லை. குறிப்பிட்ட திகதிக்கு முந்தியும் வரலாம், பிந்தியும் வரலாம்! சரியான காலமும், சரியான நேரமும் தெரிந்திருந்தால்… வீட்டினுள்ளே ஒரு ஓரமாய் இருக்கலாம்..! மாதவிலக்கு வருவதை வெளியில் இருக்கும் யாராலும் கணித்து விடவும் முடியாது! அந்தப் பெண்ணானவளுக்கே வருகின்ற அந்தக் கணத்தில்தான் தெரியும்! பல இடங்களிலும், பல நேரங்களிலும் அவளுக்கு மாதவிலக்கு வந்து விட்டால்… அவள் படுகின்ற வேதணைகளையும், அவள் படுகின்ற சங்கடங்களையும் வார்த்தைகளில் எவராலும் சொல்லிவிட முடியாது! அந்த வலிகளையும், அந்த சங்கடங்களையும் தன் மனதிற்குள்ளே அடக்கிவிடுவாள்!

7, மாதவிலக்கு என்பது ஒரு பெண்ணானவளின் தனிப்பட்ட அந்தரங்கப் பிரச்சனை! கட்டிய கணவனைத் தவிர சில நேரங்களில் தாய் சகோதரிகளைத் தவிர வேறு எவருக்கும் தெரியப்படுத்தக் கூடாது! மாதவிலக்கு என்பது மாதமாதம் வருகின்ற ஒரு விழாக்கிடையாது!

அவளைத் தனிமைப்படுத்தி ஒதுக்கி கட்டுப்பாடுகள் போட்டு சிறைப்படுத்தி வீட்டிற்குள் வைத்திருப்பதிலேயே… வீட்டிற்கு வருகிற அனைவருக்கும் தெரிந்து விடும், அவளுக்கு மாதவிலக்கு என்பது! பின் வீட்டிற்கு வந்த ஒரு சிலர் மூலம் ஊர் எல்லை வரை பரவிவிடும்! அந்தப் பெண்ணானவள் அந்த நேரங்களில் முக்கிய தேவைகளுக்காக வெளியில் போக நேர்ந்தால்….

அவளின் நிலமை பற்றி அறிந்த சிலர் இரட்டை அர்த்த வசனங்களால் மறைமுகமாக இவளின் காது படவே பேசுவார்கள். அவள் அதைக் கண்டு கொள்ளாமல் போனாலும்… அவளின் மனதில் அந்த வார்த்தைகளானது ஒருவித வலியை ஏற்படுத்தி விடும்!

சாதாரண ஒரு மாதவிலக்குப் பிரச்னையை சகலருக்கும் தெரிகிற மாதிரி நீங்கள் நடந்து கொள்வதால்தான்… அந்த நேரங்களில் பல கட்டுப்பாடுகளாலும், பல நெருக்குதல்களாலும் அந்தப் பெண்ணானவள் தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாகிறாள்! சமூகத்தைக் கண்டு பயம் கொள்கிறாள்! உடலியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பல பிரச்சனைகளுக்கு ஆளாகிறாள்! அவளின் சுதந்திரம் கூட தடை படுகிறது!மதவடய 1

8, பருவம் எய்திய பெண்களுக்கு இந்த மாதவிலக்கு 21 நாள் முதல் 45 நாட்களுக்குள் நிகழும். இது அந்தந்த நபரின் வயது, உடல் அமைப்பு அவர்கள் வாழும் சூழல் மற்றும் அவர்களுடைய உளவியல் போன்ற கூறுகளைப் பொறுத்து முன் பின் நிகழலாம். மேற்சொன்ன காரணங்களினால் மிகக் குறைவான விழுக்காடு பெண்களுக்கு மட்டுமே சரியான சமயத்தில் அதாவது 21 நாட்களில் மாதவிலக்கு உண்டாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மாதவிலக்கான பெண்ணானவளுக்கு உடலியல் ரீதியாக சூலகத்தில் உருவாகிய கரு முட்டையானது முதிர்வடைந்த நிலையில் கருப்பைக்கு வந்து சேர்க்கிறது. வந்து சேர்ந்த கரு முட்டையை பாதுகாக்கும் பொருட்டு கருப்பையானது சில நீர்மங்களை உருவாக்கி கருமுட்டையை பாதுகாக்கிறது. அத்துடன் கருவறையின் சுவர்கள் தடித்து கருவின் வளர்ச்சிக்குத் தேவையான குருதியை நிரப்பி வைக்கிறது.

இந்தக் காலப்பகுதியில் கருத்தரிப்பு நிகழாவிட்டால்… அந்தக் கரு முட்டையானது சிதைந்து அழிந்து கருப்பை உருவாக்கிய நீர்மங்களோடு சேர்ந்து குருதியாக பிறப்புறுப்பின் வழியே வெளியேறுகிறது. (இந்த நிகழ்வே “மாதவிலக்கு” என்பதாகும்) இந்த சுழற்சி முறையானது ஒவ்வொரு பெண்ணிற்கும் மாறுபடும். சில பெண்களின் உடல் அமைப்பினைப் பொறுத்து மூன்று முதல் ஏழு நாட்கள் வரை குருதியானது வெ ளியேறிக்கொண்டு இருக்கும். ஒரு நாளில் குறைந்தது 50 முதல் 80 மில்லி லீட்டர் வரை குருதி வெளியேறும்.

இந்த உடலியல் சுழற்சி முறையால் மாதவிலக்கான பெண்ணின் உடலுக்குள் பலவிதமான மாற்றங்களை உருவாக்குகிறது. குருதியானது சிறிது சிறிதாக தொடர்ந்து வெளியேறும்போது அவள் பலவிதமான சக்திகளை இழக்கிறாள், இதனால் அவள் களைப்படைகிறாள்.

இந்த நேரங்களில் சிலருக்கு தலைவலி கூட கடுமையாக இருக்கும். இந்த மாற்றங்களால் அருவருப்புத் தன்மை தோன்றுகிறது. சில நேரங்களில் அடி வயிற்றில் பலமான வலியும் உண்டாகும். இந்த மாற்றங்களால் அழுகை, விரக்தி, கோபம், எரிச்சல், படபடப்பு,சோர்வு, ஒருவித மயக்கம் போன்றன உண்டாகும்.

இதன் காரணங்களால் அவள் தன் வேதணைகளை சினத்தில் காட்டலாம், சில நேரங்களில் சில பேரிடம் எரிச்சல் கொள்வாள் அல்லது எரிந்து விழுவாள்! எந்தப் பெண்ணானவளும் இவையனைத்தையும் உடனே வெளிக்காட்டமாட்டாள் ; தன் ஆழமான மனதிற்குள் புதைத்து விடுவாள்! சில நேரங்களில் மிகவும் முடியாமல் போகவே…. தன் எல்லாவிதமான வேதணைகளையும் சேர்த்து கோபத்தில் வெளிப்படுத்துவாள்.

9, இக்காரணங்களை எல்லாம் கவனத்தில் கொண்டுதான் மாதவிலக்கான பெண்ணானவளை ஒரு வேலைகளையும் செய்யவிடாமல், அவளுக்கு தொந்தரவு கூட கொடுக்காமல் அவளுக்கு உடல் மற்றும் உளவியல் ரீதியாக அதிக ஓய்வு தேவைப்படுவதை உணர்ந்து நம் முன்னோர்கள் மாதவிலக்கு முடியும் வரை அவர்களுக்கு ஓய்வு கொடுத்தனர். நல்ல ஓய்வும், உடல் சுத்தமும் தேவை என்பதால் அவர்களைத் தனிமைப் படுத்தி எல்லாவற்றிலிருந்தும் விலக்கி வைத்திருந்ததாலேயே “மாதவிலக்கு” என்ற பெயரும் வந்தது!

பெண்ணாகப் பிறந்த எல்லோருக்கும் மாதவிலக்கு என்பது இயல்பாக வருவதுதான். நமது உடலின் கழிவுகள் எப்படி வியர்வையாக, சிறுநீராக, மலமாக வெளியேறுகிறதோ… அதே போன்ற ஒரு நிகழ்வுதான் இந்த மாதவிலக்கும்! அதைத்தாண்டிய வேறு எந்த முக்கியத்துவமும் இந்த நிகழ்வுக்கு இல்லை.

இதைப் புரிந்து கொள்ளாத நம் பெரியோர்கள்தான் மாதவிலக்கு காலங்களில் பெண்களைத் தீண்டத்தகாத ஒருவராக எண்ணி “சுகமில்லாதவள்”, “தீட்டானவள்”, “வீட்டுக்குத் தூரமானவள்”, “வீட்டிற்கு வெளியானவள்”, “தொடமாட்டாள்” என வெவ்வேறு பெயர்களால் அழைத்து எதைத் தொட்டாலும் “தரித்திரம்” என்ற ஒரு கொடிய வார்த்தையால் தடுத்து வைத்துள்ளார்கள்.

மாதவிலக்குப் பற்றிய தெளிவுகளை உருவாக்குவதற்கு பதிலாக தவறான எண்ணப்பாடுகளோடு காலம் காலமாக மூட நம்பிக்கைகளோடு அணுகுகிறார்கள். இனியாவது புரிந்து தெளிவோடு நடந்து கொள்ளுங்கள்.

பெண்களானவர்கள் பூக்களைப் போன்றவர்கள். மென்மையானவர்கள். அதனாலேதான் கவிஞர்கள் பெண்களை பூக்களோடு ஒப்பிட்டார்கள்! பெண்களும் இயற்கயிலேயே பூக்களை அளவுக்கு அதிகமாக நேசிப்பவர்கள்! அவர்கள் ஒரு அழகிய பூவைக்கண்டு தொட்டுப்பார்க்க முயன்றால்…. அந்த உயிரற்ற பூக்கள் கசங்கிவிடும் என்று, இந்த உயிருள்ள பூக்களையும் கசக்கி விடாதீர்கள்!

அறிவியல் விளக்கம்:

மாதவிலக்கு அல்லது மாதவிடாய் என்பது ஒரு பூப்படைந்த பெண்ணின் உடலில், கலவிமுறை இனப்பெருக்கம்தொடர்பாக, மாதந்தோறும் சுழற்சி முறையில் நிகழும் ஒரு உடலியங்கியல் மாற்றமாகும். இது பெண்ணின்இனப்பெருக்கத் தொகுதியிலுள்ள ஒரு உறுப்பான கருப்பையிலிருந்து, யோனியினூடாக மாதத்தில் 3-7 நாட்கள்குருதி வெளியேறுவதை குறிக்கும்.

இடக்கரடக்கலாக வீட்டில் இல்லை, வீட்டிற்கு வெளியே, வீட்டுக்குத் தூரம்,வீட்டு விலக்கு என்றும் சொல்வழக்கு உண்டு. மருத்துவப்படி, ஒவ்வொரு மாதமும், கருத்தரிப்பிற்கானதயார்ப்படுத்தலுக்காக, கருப்பையின் உள் மடிப்புகளில் (endometrium) போதிய இரத்தம் நிரம்பி இருக்கிறது. ஒரு பெண் கர்பமடைவாரேயானால், கருப்பையில் தங்கும் கருக்கட்டிய முட்டைக்கு போதிய ஊட்டச்சத்தைவழங்குவதற்காகவே இந்த குருதி நிறைந்த மடிப்புக்கள் உருவாகியிருக்கும். பெண் கருத்தரிக்காத நேரங்களில் இம் மடிப்புகளில் உள்ள தேவையற்ற இழையங்களும், அவற்றுடன் சேர்ந்து மடிப்புக்கள் இருக்கும் நுண்ணிய குருதிக் குழாய்களிலிருந்து வெளிவரும் குருதியும் வெளியே கழிவாக தள்ளப்படுகிறது. இந்நிகழ்வு மாதந் தோறும் சுமார் மூன்று முதல் ஏழு நாட்களுக்கு நடைபெறுகிறது. இதனையே மாதவிடாய் என்கிறோம். இந்த மாதவிடாய் வெளியேற்றம் மாதத்திற்கு ஒருமுறை யோனிமடல் ஊடாக நடைபெறுகிறது. இறுதி நாளோ அல்லது கடைசி இரு நாட்களோ வெளியேற்றம் குறைவாக இருக்கும். சில வேளைகளில் முதல் நாள் குறைவாக இருக்கும்.

மாதவிடாய் மாதவிடாய்ச் சுழற்சியின் ஒரு பகுதியாகும். இச்சுழற்சியின் நீட்டம் 21 நாட்களிலிருந்து 45 நாட்கள் வரை இருக்கும். முதல் மாதவிடாய் பொதுவாக 10 வயதிற்கும் 16 வயதிற்கும் இடையே ஒரு பெண் பூப்படையும்போது ஏற்படுகிறது. இந்நிகழ்வு அனைத்து பாலூட்டிகளிலும் நடந்தாலும், மனிதன், மற்றும் பரிணாம வளர்ச்சியில் மனிதனுடன் நெருங்கிய தொடர்புடைய சிம்பன்சி போன்ற சில விலங்கினங்களிலேயே இவ்வாறு வெளிப்படையாக கருப்பை மடிப்பு வெளியேறுகிறது. மற்ற பாலூட்டிகளில், இனப்பெருக்க சுழற்சியின் இறுதிக்காலத்தில் கருப்பைமடிப்புகள் மீளவும் உள்ளே உறிஞ்சப்படுகின்றது.

No comments:

Post a Comment